கர்ப் गर्भ” என்றால் கருப்பை “ஆதானம்” आधानम् என்றால் வைப்பு. அதாவது விதையை கருவில் வைப்பதின் சம்பந்தமாக வரும் சம்ஸ்க்காரம் கர்பாதானமாகும். இந்த சுத்திகரிப்பு சடங்கு திருமணம் முடிந்தவுடன் ஆரோக்கியமான மற்றும் நல்ல சந்ததிக்காக நடத்தபடுகிறது.
இது திவிஜனனின் திருமணத்திற்கு பிறகு நடத்தபடும் முதல் சம்ஸ்க்காரமாகும். அவனின் வேத வழி பாதை இதன் மூலம் துவங்குகிறது.
மனு முனிவர் : 2.26
वैदिकै: कर्मभि: पुण्यैर्निषॆकादिर्द्विजन्मनाम्। कार्य: शरीरसम्स्कार: पावन: प्रॆत्य च-इह च ॥
வைதிகை: கர்மபி: புண்யைர் நிஷேகாதிர் த்விஜன்மனாம் | கார்ய: ஶரீரஸம்ஸ்கார: பாவன: ப்ரேத்ய ச-இஹ ச |
இந்த உட்புகுத்துகை (நிஷேகம்) விழா வேத மந்த்ரத்தை கொண்டு பவித்ர மனத்துடன் திவிஜனுக்கு செய்வித்தல் வேண்டும். அது அவனுக்கு பிறப்பிலும் பின்பு இறப்பிலும் புனிதபடுத்தும்.
இந்த புனித சடங்கின் கர்தா கணவனாகும். வேதம் அறிந்த பண்டிதரின் வழி காட்டுதலின் கீழ் கணவன் மனைவியின் முன்னிலையில் இந்த விசேஷமான மந்திரத்தை சொல்லி அனுஷ்டிக்க வேண்டும். இருவரும் இந்த வேத சம்ஸ்க்காரம் செய்வதன் மூலம் பிறப்பிலிருந்து குழந்தையை ஆன்மிக இலக்கை அடைய வழி நடத்த உதவுகிறது.
நோக்கம் : சதிபதிகள் குழந்தை விரும்பும் பொழுது இந்த சடங்கு இரவில் நடத்தபடுகிறது.(குறிப்பு : இந்த சம்ஸ்க்காரம் ஒவ்வொரு குழந்தை விரும்பும் பொழுதும் நடத்தபட வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது இன்று பெரும்பாலும் நடை முறையில் இல்லை. பெரும்பாலான மக்கள் முதலிரவன்றே செய்து முடித்துவிடுகிறார்கள்)
எந்த நாட்கள் :
கர்பாதானம் கண்டிப்பாக ருது காலத்தில் செய்ய வேண்டும். (மாதவிலக்கிலிருந்து 16 நாட்கள் ருது காலம் எனப்படும்). இந்த சம்ஸ்க்காரம் மாத விலக்கிலிருந்து 5 ஆம் நாள் முதல் 16 ஆம் தேதி வரை ஒரு நல்ல புனிதமான நாளில் நல்ல நேரத்தில் செய்யலாம் ( உங்கள் வீட்டு வாத்யாரிடம் நாள் கிழமை திதிகளை கேட்டு கொள்ளவும்).
மனிதன் மனைவி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்கும் வரை அவசியம் சங்கமிக்கவேண்டும் என்று சாஸ்த்ரம் வரையிறுத்துகிறது. பிறவி பெருங்கடன் (பித்ரு ருணம் ) ஆண் குழந்தை பெருவதாலேயே தீருகிறது என்றும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் சங்கமம் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்துகிறது. மேலும் இரட்டைபடை நாட்களில் (2,4,6,8..) சங்கமித்தால் ஆண் குழந்தை என்றும் ஒத்தைபடை நாட்களில் (1,3,5,7 ..) சங்கமித்தால் பெண் குழந்தை பாக்கியம் என்றும் கருதப்படுகிறது. நல்புத்ர புத்ரி பெற வேண்டி முதல் நான்கு நாட்களை தவிர்த்து விடவும். பின்வரும் நாட்களில் சங்கமித்தால் உண்டான பலனை வரையறுத்துள்ளது.
5 ஆம் நாள் – பெண் குழந்தை
6 ஆம் நாள் – சராசரி ஆண் குழந்தை
7 ஆம் நாள் – குழந்தை பாக்கியம் கிடைக்காத பெண்
8 ஆம் நாள் – ஆதிக்கம் செலுத்தும் ஆண்
9 ஆம் நாள் – நல்ல பெண் குழந்தை
10 ஆம் நாள் – நல்ல ஆண் குழந்தை
11 ஆம் நாள் – அதர்மம் விளைவிக்கும் பெண்
12 ஆம் நாள் – சிறந்த ஆண் குழந்தை
13 ஆம் நாள் – விலைமாது பெண்
14 ஆம் நாள் – தர்மம் தோய்ந்த ஆன்மிக உயர்ச்சி உடைய ஆண்
15 ஆம் நாள் – நல்ல கணவன் வாய்க்க பெற்ற பெண்
16 ஆம் நாள் – நல்ல குணம் படைத்த ஆண்
எந்த நட்சத்திரம் ?
உத்தர, உத்தராஶாட, உத்தரபாத்ரபாத, ரோஹிணீ, ம்ருகஶீர்ஶ, ஹஸ்த, அனுராதா,ஶ்ரவிஷ்ட, ஶதபிஷக் ஸ்வாதீ நட்சத்திரத்தில் பிறந்த நாட்கள் கர்பாதானம் செய்ய உகந்தது என்று கருத படுகிறது. உங்கள் வீட்டு வாத்யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
எந்த கிழமை ?
திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி கிழமை உகந்தது என்று கருதபடுக்கிறது. உங்கள் வீட்டு வாத்யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
இந்த சம்ஸ்க்காரம் ஒருவரது வீட்டில் செய்வது உகந்தது. இது ஒரு க்ருஹ்ய ஸ்மார்த கர்மா ஆகும். இதை ஒரு கோவிலிலோ, குரு வீட்டிலோ, புனித மரத்தடியிலோ, கோசாலையிலோ, மயானத்திலோ, காட்டிலோ அல்லது தண்ணீரிலோ செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பின்வரும் நிலைகள் இருந்தால் இந்த சம்ஸ்க்காரத்தை தவிர்க்க வேண்டும்.
- கற்பிணி பெண்கள்
- சங்கமத்தை விரும்பாத பெண்
- நோயுற்ற ஆண் / பெண்
- தலை விரித்துள்ள பெண்
- பசியுள்ள பெண்
- நிறைய புசித்த பெண்
- அமாவாஸ்யை, பௌர்ணமி, அஷ்டமி, சதுர்த்தசி, ஷஷ்டி, ஏகாதசி, திவாதசி, சங்க்ரமண, பிறந்த நட்சத்திரம் நாள், ஸிரார்த தினம், பகலில், ஸந்த்யா காலத்தில் அல்லது எந்த விரத நாட்களிலோ சங்கமம் கொள்வது நல்லதல்ல. பிறக்கும் குழந்தைக்கு அகால மரணமோ அல்லது அச்சமூட்டும் குணமோ வாய்க்கும் என்று கருதப்படுகிறது.
- ருது காலம் அற்ற நாட்களில் கூட இன்பத்திற்க்காக கலவி அனுமதிக்கபட்டுள்ளது. அதிலும் மேற்கூறும் நாட்களை தவிர்க்க வேண்டும். இதில் கூறப்பட்ட விதத்தில் அனுஷ்டிக்கும் கிருஹஸ்தனும் பிரஹ்மச்சரிய விரதத்தை கடைபிடிப்பவனுக்கு சமானமாவான் என்று கூறபட்டுள்ளது.
மனுஸ்ம்ருதி – 3.45
ऋतुकालाभिगामि स्यात् स्वदारनिरत: सदा । पर्ववर्जं व्रजॆच् च-ऎनां तद् व्रतॊ रतिकाम्यया ॥
ருதுகாலாபிகாமி ஸ்யாத் ஸ்வதாரனிரத: ஸதா | பர்வவர்ஜம் வ்ரஜேச் ச-ஏனாம் தத் வ்ரதோ ரதிகாம்யயா |
கணவர் அவரது மனைவியை ருது காலத்தில் தொடர்ந்து அவளிடம் மட்டும் திருப்தி பெற அணுகட்டும். அவர் அவள் மகிழ்ச்சியுற பார்வன நாட்கள் ( அமாவாஸ்யை பௌர்ணமி தினங்கள் ) தவிர மற்ற நாட்களில் அணுகட்டும்.
தங்கள் வீட்டின் வாத்யாரிடம் முறைப்படி விஞாபித்து நடத்தி கொடுக்க சொல்லி ப்ரார்திக்கவும். சாஸ்திரத்தின் அடிப்படையில் கீழே கோடிட்டு காட்டியுள்ளோம். கிருஹ்ய சூத்திரத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம். ஆபத்ஸம்பர் சூத்திரத்தில் அடிப்படையில் கோடிட்டு தர முயற்சி செய்துள்ளோம்.
காலையில்:
- நித்திய கர்மா – தினமும் செய்யபட வேண்டிய ஸந்த்யாவந்தனமும், ஔபாசனமும் கர்தா செய்து முடிக்க வேண்டியது.
- வீட்டு வாத்யார் வந்து கீழே குறிப்பிட்டதை செய்து கொடுப்பார்
- அநுஞை – வேதம் முறைப்படி பயின்ற பிராஹ்மணனிடம் வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தக்ஷிணை சமர்பித்து அவர்களின் உத்தரவு பெரும் படலம் அநுஞை ஆகும்.
- ருது சாந்தி ஜப கர்மா –
- சங்கல்பம் – இடம், நாள் நட்சத்திரம் கோத்ரம், திதி, மாதம், ருது குறிப்பிட்டு இந்த கர்மா செய்ய சங்கல்பிப்பது இந்த இடத்தில் தான்.
- கும்ப பிரதிஷ்டை – முழு வாழை இலையில் அரிசி அல்லது கோதுமை அல்லது எள்ளினால் பரப்பி வெள்ளியினாலோ அல்லது தாமிரத்தினாலோ ஆன கலசத்தில் முறையே நூல் சுற்றி பின்பு வியாக்ருதி சொல்லி தண்ணீர் நிரப்பி அதன் மேலே வைத்து மாவிலையை மேலே உட்புகுத்தி தேங்காயை மேலே வைத்து தயார் செய்யும் படலம் இது. பின்பு வருண இன்னும் பிற தேவதைகளை ஆவாஹனம் செய்து வேத பிராஹ்மணர்கள் வேத கோஷம் செய்வார்கள். கர்தா இதன் மூலம் உள் புற சுத்திகரிப்பை பிரார்தனை செய்து அந்த கலச புனித நீரை அந்த வேத பிராஹ்மணர்கள் தெளித்து பிறகு எல்லா கலச நீரையும் கர்தா அவன் மனைவியின் தலையில் சேர்த்து அவளை கர்பாதான சம்ஸ்க்காரத்திற்க்கு ஏற்றவளாக்குகிறான்.
- ஹோமம் : இதில் ஆஜ்ய பாகம் மற்றும் ஜயாதி ஹோமம் போன்ற வேள்வியும் அந்தந்த தேவதையின் காய்த்ரி மந்திரமும் ருது சம்பவித்த தினத்தின் நட்சத்திர சாந்தியும் மற்றும் வெவ்வேறு ஜபமும் வேள்வியும் செய்யபடுகிறது. பின்பு வேத விற்பன்னரின் தக்ஷிணையுடன் இந்த சடங்கு நிறைவேறுகிறது.
மாலையில்
- நித்திய கர்மா – தினமும் செய்யபட வேண்டிய ஸந்த்யாவந்தனமும், ஔபாசனமும் கர்தா செய்து முடிக்க வேண்டியது.
- இரவில் பாற்சோறு சதிபதிகள் சாப்பிட வேண்டியது.
- பிறகு வீட்டு வாத்யார் “கர்பாதான சமாவேஷண” செய்வீப்பார்.
விஷ்ணுர்யோனிம் கல்பயது த்வஷ்டா ரூபாணி பிக்ம்ஶது ஆ ஸின்சது ப்ரஜாபதிர் தாதா கர்பம் ததாது தே |
கர்பம் தேஹி ஸினீவாலி கர்பம் தேஹி ஸரஸ்வதி | கர்பம் தே அஶ்வினௌ தேவவாதத்தாம் புஷ்கரஸ்ரஜா |
ஹிரண்யயீ அரணீ யம் நிர்மன்ததோ அஶ்வினா |தம் தே கர்பக்ம் ஹவாமஹெ தஶமே மாஸி ஸூதவெ |
யதேயம் ப்ருதிவீ மஹீ திஷ்டந்தீ கர்பம் மாததே |ஏவம்த்வம் கர்பமாதத்த்ஸ்வ தஶமே மாஸி ஸூதவே |
யதாப்ருதிவ்யக்னிகர்பாத்யொவ்ர்யதேன்த்ரேண கர்பிணீ |வாயு: யதாதிஶாம் கர்பம் ஏவம் கர்பம் ததாமிதே |
விஷ்ணோ: ஶ்ரேஷ்டேன ரூபேண அஸ்யாம் நார்யாம் கவீன்யாம்புமாக்ம்ஸம் கர்ப மாதேஹி தஶமே மாஸி ஸூதவே |
நேஜமேஷ பராபத ஸுபுத்ர: புனராபத |அஸ்யைமை புத்ரகாமாயை கர்ப மாதேஹி ய: புமான்
வ்யஸ்யயோனி ப்ரதிரேத: க்ருஹாண புமான் புத்ரோ தீயதாம் கர்போ அந்த: |தன்மாதா தஶமாஸோ பிர்பர்து ஸஜாயதாம் வீர தமஸ்வானாம் |
ஆதே கர்போ யோனிமேது புமான்பாண இவேஷுதிம் |ஆவீர: ஜாயதாம் புத்ரஸ்தே தஶமாஸ்ய:
அர்த்தம்
இந்த உலகத்தின் ஆதாரமான விஷ்ணுவை கர்பாதானத்தை முழுமை அடைய வேண்டி தியானிக்கிறேன். படைக்கும் பிரஹ்மன் என் மூலம் விதை தூவட்டும். தாதா கரு விதையின் உரமளிக்கட்டும். த்வஷ்டா அவயங்கள் அளித்து அழகான உருவமளிக்கட்டும். சரஸ்வதி தேவி அறிவையும் அஸ்வினி குமாரர்கள் தாமரை கொடி கருவில் சுற்றி காக்கட்டும். எப்படி இந்த பூமி தானியங்களை உருவாக்குகிறதோ அப்படி நீ ஒரு நல்ல குழந்தையை உருவாக்குவாய். நாம் நல்ல சக்தியுடன் நீண்ட ஆயுளுடன் ஆண்மையுடைய குழந்தையை உற்பத்தி செய்வோம். நீ சத்புத்ரனை பெற்றெடு. பித்ருவின் வம்சாவளிக்காக அவர்களின் சந்தோஷத்திற்க்காக நல்ல ஆண் மகவை பெற்றெடு. நாம் நல்ல அழகுடைய மற்றும் செல்வமுடைய மகவை பெற்றெடுப்போம். நாம் ஏழைகளுக்கு தானமளித்து மோக்ஷம் அடைவோம். நம் உடம்பு நல்ல சக்தியுள்ள மகவை பெற்றெடுக்க வேண்டிய சக்தி அடையட்டும். நீ நன்கு கர்பம் தரித்து சிசுவை நல்ல படியாக பாதுகாப்பாய். ஹே ! விஷ்ணோ இவள் 10 மாதம் கழித்து கருச்சிதைவு இல்லாமல் அங்க சிதைவு இல்லாமல் நல்ல மகவை பெற்றெடுக்கட்டும். ப்ரிய சகியே 10 மாதம் சுமந்து நல்ல மகவு பெற நீ எனது சக்தியை எடுத்துக்கொள். நீ மேன்மேலும் மகவு பெற ஆசீர்வதிக்கின்றேன்.
சம்போஹம்:
பிறகு சாதிபதிகள் சங்கமத்திற்க்கு செல்லலாம். இரவில் வெளியே வேத விற்பன்னகர்கள் மந்திர உச்சாடனை செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது.
நியதிகள்:
சதிபதிகள் நன்கு அலங்காரம் செய்து கொள்ளவேண்டும்
- விளக்கு சங்கமத்தின் அருகாமையில் இருக்க வேண்டும்.
- இது முதல் சங்கமம் எனில் பதியின் பூணல் யஞோபவிதமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பின்புற மாலையாக போட வேண்டும்.
- உயர்ந்த சிந்தனைகள் மனத்தில் வேண்டும். இருவரும் மனத்தாலும் உடலாலும் சக்தியுடன் பட்டினியில்லாமலும் வயிறு நிரம்ப உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
- முதல் சங்கமமெனில் கர்தா நீராடவும். இல்லையேல் ஆசமனம் போதுமானது.
மறுநாள் நாந்தி ஸ்ரார்தம் செய்து முடிக்க வேண்டும். மற்றும் பிருகஸ்பதி ஸம்பாவனை செய்து இந்த சம்ஸ்க்காரத்தை நிறைவு செய்யவும்.
குறிப்பு:
வேதத்திற்க்கு தமிழில் மறை என்று ஒரு பெயர் உண்டு. அதில் மறைபொருள் இருப்பதால் தான் அதற்க்கு அந்த பெயர். மேலெழுந்தவாரியாக உள்ள பொருளை நாங்கள் கொடுக்க முயற்சித்துள்ளோம். இதில் பல நுண்ணிய உட்பொருள்கள் மற்றும் அதன் தெய்வீக சப்தங்கள் நமது அறிவிற்க்கு அப்பாற்பட்டது. அது நமது மேல் கொண்ட அக்கறையை நினைத்து பார்க்கும் பொழுது மனது நெகிழ்வுறுகிறது. முறைப்படி செய்து பலன் பெறுவோம்.
விதை நன்கு இருந்தால் தான் அது செடியாகி பின்பு பயனுள்ள மரமாகிறது. அதே போல் நாம் இந்த பயனுள்ள சம்ஸ்க்காரத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த வேத வழி நமது மனம் உடல் மற்றும் ஆன்மா சுத்திகரிக்க பயன்படுகிறது. அதன் மூலம் நாம் நல்ல சத்வத்தை அடைய முடியும். இந்த வேதவழி விரசம் இல்லாமலும் அதே சமயத்தில் நம்மை தெய்வீக வழிக்கு திருப்புகிறது. இதை நாம் சரியான முறையில் அணுகி இருந்தோம் என்றால் ஒருவேளை இன்றய பல பிரச்சினைகளை தவிர்த்து இருக்க முடியும். இதை அனுஷ்டித்து பயன் பெறுங்கள். மேலும் இதை உங்கள் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.